Wednesday, December 15, 2010

மிஷ்கினின் உதவி இயக்குனர்களுக்கு ஒரு கடிதம்!

மிஷ்கின் தமிழ் வலைப்பூக்களைப் படிப்பதில்லை என்று தோணுவதால், உதவியாளர்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கண்ணில் பட்டால் அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடவும்....!

''மிஷ்கின்,
நீங்கள் உலகப்படங்களைப் பார்ப்பதிலும், அயல்மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதிலும் நேரம் செலவிடுவதால், தமிழில் படிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்! சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் உங்களுடைய பேச்சில் இது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது! விழாவில், நந்தலாலா படத்தைப் பற்றிப் பேசும்போது, சில காட்சிகளைக் கூறி, அவற்றை யாரும் சிலாகித்துப் பேசவோ எழுதவோ இல்லையே என்று ஆதங்கப்பட்டீர்கள். (உ.ம். முதல்காட்சியில் சிறுவன் முகத்துக்கு நேரே கேமரா விரிவது, தூங்குகிறவர்களின் பின்னணியில் பாம்பு நெளியும் காட்சி, இன்னும் சில.) நீங்கள் தமிழ் வலைப்பூக்களை வாசித்திருந்தீர்களேயானால், பாராட்டி எழுதப்பட்ட விமர்சனங்களில் எத்தனையோபேர் இந்தக் காட்சிகளை மிகவும் சிலாகித்து, கொண்டாடி எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்! ஆனால் உங்களுக்குத்தான், ஆங்கில எழுத்துக்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லையே! பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?! 'காப்பி என்று சொல்லிவிட்டார்கள்', என்று காதில் விழுந்த தகவல்களை வைத்துக்கொண்டு பொங்கி எழுகிறீர்கள்! ஆனால் வலையுலகில் உங்கள் படத்தைக் கொண்டாடியவர்களே அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும், 'தமிழின் முதல் படம்' என்கிற அளவிற்குப் பாராட்டிப் பேசியவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

'காப்பி' அடிக்கவில்லை, இது என் உணர்வில் வளர்ந்த கதை என்கிறீர்கள், ஆனால் 'கிகுஜிரோ'வின் (கிட்டத்தட்ட) அத்தனை கதாப்பாத்திரங்களும் 'நந்தலாலாவி'ல் வலம் வருகிறார்களே, அதை என்னவென்று கூறுவது? கதையில் வரும் சில காட்சிகள் ஒரு 'இன்ஸ்பிரேசனாக' (குருநாதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக) வைத்தேன் என்கிறீர்கள்! கதாப்பாத்திரங்களும் அப்படியேவா?

இதுமாதிரி இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலளிக்கப்படாமலே இருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் உங்களை 'தமிழின் மிகத் திறமையான இயக்குனர்களுள் ஒருவர்' என்று ஒத்துக்கொள்கிறோம்! ஆனால் உங்களை ஒரு மிகச் சிறந்த 'படைப்பாளி' என்று கூற முடியாது! இன்னும் நான்கைந்து படங்கள் 'நந்தலாலா' போல, இல்லை அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்! நீங்கள் ஒரு 'அறிவுஜீவி' என்ற பட்டத்தை நாங்களே கொடுக்கிறோம்! அதை நீங்களே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!''

உண்மையான உலகப்படங்களைப் படைத்திட வாழ்த்துக்களுடன்,
ஊர்சுற்றி ஜோன்சன்.

Monday, December 6, 2010

அம்பேத்கர் - காலத்தின் மாபெரும் பரிசு!

உங்களில் தீண்டாமை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? பாடப்புத்தகங்களிலும், பதிவுகளிலும், கவிதைகளிலும், பேச்சாளர்களின் உரைகளிலும் மட்டுமே 'தீண்டாமை' பற்றி அறிந்துகொண்டவர்கள் எத்தனைபேர்? கிராமங்களில் அது பரப்பியிருந்த வேரின் வீரியம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இன்றைய சூழ்நிலையில், 'எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க, இங்கே எங்கே சாதிக்கொடுமை இருக்கிறது?' என்று கேள்விகேட்பவர்களுக்கு, 'தொலைந்துபோன உங்கள் பொதுஅறிவைத் தேடுங்கள் - கண்டடைவீர்கள்!' என்பதே எனது பதில்.

எனக்கு நினைவு தெரிந்து (15 வருடங்களுக்கு முன்பு), எங்கள் ஊர் தோட்டக்காரர்களிடம் அருகில் இருந்த மற்றொரு ஊரிலுள்ளவர்கள் கூலிக்காரர்களாக இருந்து வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது! எனது ஊரில், எனது தலைமுறையும் எனக்கு முந்தைய தலைமுறையும் படிப்பிலும் வியாபாரங்களிலும் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் ஊரில் பெரும்பாலானோர் எங்கள் வயல்களில் வேலைசெய்ததை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள், எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் காட்டும் மரியாதையும் பக்தியும், 'சாமி' என்று கும்பிடு போடுவதையும், இன்னும் என்னென்னவோ!

     பதினைந்து வருடங்களுக்கு முன்பே இந்த நிலை என்றால் நூறு வருடங்களுக்கும் முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை! 'ஆயிரம் SMS-ல சொல்றத ஒரு MMS-ல சொல்லிடலாம்' என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை! அதை உண்மை என்று நிரூபிக்கிறது 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம். அம்பேத்கரின் அமெரிக்க கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கும் படம், வரிசையாக இந்தியாவின், இந்து மதத்தின் - அப்போதைய(ஏன் இப்போதையதும் கூட) வறட்டுக் கொள்கைகளையும் முட்டாள்தனமான விசயங்களையும் சுட்டுப் பொசுக்கிக்கொண்டே பயணிக்கிறது.


அம்பேத்கரின் குரல், எந்தச் சூழ்நிலையில் 'காந்தி' என்கிற மகாசக்திக்கு எதிராக முழங்கியது என்பதன் பின்புலத்தை உங்கள் மனதில் ஆழப் பதியவைக்கிறது இந்தப் படைப்பு. இந்தியப் பிரிவினைக்கு 'காந்தி'யின் மீது பழிசுமத்தும் கும்பல் எழுதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் 'தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக காந்தி எழுப்பிய மந்தமான குரலை'க் கண்டிப்பதைப் பார்க்க முடியாது.

ஏனென்றால்,
'இந்து மதத்தில் எல்லோரும் ஒன்றுதான்' என்று முழங்கி, அதன் பல நூற்றாண்டுகால சமூகக்கழிவான 'சாதி', அதன் நாற்றமான 'தீண்டாமை' என்பதை மறைமுகமாக ஆதரித்தவர், காந்தி(அல்லது, உயர்சாதியினரின் பிடிவாதத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தவர்).   இதை உலகுக்கு உரத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அம்பேத்கர் மற்றொருவர் நம் கிழட்டுச் சிங்கம் - பெரியார்!

சாதிகள் பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் பற்றியும், காந்திக்கு எதிரான நிலைப்பாட்டினால் அவரது அரசியல் வீழ்ச்சிகள் பற்றியும், நாட்டு விடுதலை எப்படி சமூக விடுதலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது என்பதையும் தெளிவாக குழப்பமில்லாமல் சொல்லிச் செல்கிறது 'டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்' என்ற இந்தக் காவியம். காந்தியையும் காங்கிரஸையும் எதிர்த்த அம்பேத்கரே, பின்னாளில் சட்டத்திற்காகவும், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் அதே காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்ததும், இந்திய அரசியலமைப்புச் சட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கியதும் வரலாறு.

இந்தியாவின் வரலாறு பற்றியும், சாதிகள் பற்றியும், இந்திய விடுதலை வரலாற்றின் மற்றொரு பக்கத்தையும் தெரிந்துகொள்ள நினைக்கும் எல்லோரும் பார்க்கவேண்டிய படம், இந்த 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்'.

ஒரு கவனிப்பு:
சென்னையில்,
ஐந்தாறு திரையரங்குகள்
அதிகபட்சமாக 40 காட்சிகள்
ஒரு காட்சிக்கு சராசரியாக 300 நபர்கள் (என்று வைத்துக்கொண்டாலும்)
மொத்தம் 12000 பேர்.

இந்தச் சீட்டுகளே முழுமையாக விற்கப்படவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. அதுவும் மேல்தட்டு மக்கள் அதிகம் செல்லும் சத்யம், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் பாதி மட்டுமே நிரம்பியது. இந்த எண்ணிக்கையில் கூட அம்பேத்கர் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இல்லையா!

பின்வருவனவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

*அம்பேத்கர் யாருக்காகப் போராடினாரோ அவர்களுக்கு அம்பேத்கர் மீது எந்த ஈடுபாடும் இல்லை.
*தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடமிருந்து, இந்த அளவு எண்ணிக்கையில் கூட, பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் உருவாகவில்லை.
*படிப்பறிவின்மையும், அடிமைத்தன உணர்வும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து முழுமையாக இன்னும் அகலவில்லை, அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக இன்னும் மேன்மையடையவில்லை.
*அம்பேத்கர் பற்றி தேவையான அளவிற்கு எல்லாமும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் நம் மக்கள்!
*இந்த மாதிரி மேல்தட்டு மக்களுக்கான திரையரங்குகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவிரும்பவில்லை.

********
'பால அபிராமி' தியேட்டரில் வரவிருக்கின்ற மூன்று வார இறுதி நாட்களில் (டிசம்பர் 11,12,18,19,25,26 ஆகிய விடுமுறை தினங்களில் காலை 91.5 மணிக்கு) இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.